‘சகாயதா’ என்கிற சக்கர நாற்காலி குறைந்தபட்ச மனிதத் தலையீட்டுடன் பயனர்களின் கழிப்பறை பிரச்சனைகளுக்குத் தீர்வளிப்பதுடன் அவர்களது மரியாதையைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்களிக்கிறது
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு…”
இந்தத் திருக்குறளுக்கு ஏற்றபடி படுக்கையிலிருந்து எழுந்து செல்ல முடியாத நிலையில் இருக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலன் பாதிக்கப்பட்டோர் போன்றோருக்கு தக்க சமயத்தில் உதவும் தோழிதான் ஸ்ருதி பாபு.
ஆம், இவர்களைப் போல், கழிப்பறைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்போர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இயற்கை உபாதைகளைக் கழித்துவிட, அவர்களது அந்தரங்கப் பகுதிகளை சுத்தப்படுத்தும் ஒரு அற்புதமான தயாரிப்பை இவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
‘சகாயதா’ (Sahayatha) என்கிற இந்தப் புதுமையான தயாரிப்பு குறைந்தபட்ச மனிதத் தலையீட்டுடன் பயனர்களின் கழிப்பறை பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கிறது. அதைக் காட்டிலும் முக்கியமாக அவர்களது மரியாதையைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்களிக்கிறது.
ஸ்ருதி பாபு, அவரது அப்பா பாபு கிருஷ்ணன் இருவரும் இணைந்து Dhanvantri Biomedical Private Limited நிறுவினார்கள். இந்நிறுவனத்தின் தயாரிப்புதான் ‘Sahayatha’.
நிறுவனரின் பின்னணி
ஸ்ருதி பாபு 2016ம் ஆண்டு கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங் முடித்துள்ளார். தொழில்முனைவர் ஆகவேண்டும் என்பதே இவரது கனவு.
கல்லூரியில் படித்த நாட்களிலேயே தொழில்முனைவு தொடர்புடைய கோர்ஸ்களில் ஆர்வமாக சேர்ந்துள்ளார். கல்லூரி இறுதியாண்டு பிராஜெக்ட் முடித்தார். அதையே வணிகமாக மாற்றலாம் என்று திட்டமிட்டார். அது சந்தையில் ஏற்கெனவே இருக்கும் தயாரிப்பு என்பது தெரியவந்தது.
அந்த சமயத்தில் வணிக வாய்ப்புகளை அலசி ஆராயவோ வழிகாட்டவோ யாருமில்லை. வேறு வழியின்றி 9-5 வேலையில் சேர்ந்தார். ஆனால், தொழில்முனைவு ஆர்வம் மனம் முழுவதும் நிறைந்திருந்ததால் வேலையில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தமுடியாமல் போனது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை வேலை செய்தார்.
“வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் தொழில் வாய்ப்புகளைப் பத்தி யோசிப்பேன். வணிகத்திற்குத் தேவையான நிதியை எப்படி திரட்டலாம்? யார் நிதியுதவி செய்வாங்க? யார் வழிநடத்துவாங்க? இந்த மாதிரி யோசிச்சப்பதான் ஒரு ஃபெலோஷிப் பத்தி தெரியவந்தது. மத்திய அரசோட BIRAC ஏஜென்சியோட ஃபெலோஷிப் இது,” என்கிறார் ஸ்ருதி பாபு.
எந்த மாதிரியான தயாரிப்பிற்குத் தேவை இருக்கும் என்பதை நேரடியாக களத்தில் இறங்கி தெரிந்துகொள்ள இந்த ஃபெலோஷிப் ஊக்குவித்தது.
“ஃபெலோஷிப்போட தீம் ‘முதியவர்கள்’. நான் பயோமெடிக்கல் என்ஜினியர். அதனால வயசானவங்களோட எந்த மாதிரியான பிரச்சனைக்கு சொல்யூஷன் தேவைப்படுதுன்னு தெரிஞ்சுக்க ஹாஸ்பிடல், முதியோர் இல்லம், ரிடையர்மெண்ட் ஹோம் இந்த மாதிரியான இடங்களுக்கு போனேன்,” என்கிறார்.
அந்த சமயத்தில்தான் அவரது வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப் போட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதுவே தொழில் முயற்சியின் என்ட்ரி புள்ளியாகவும் அமைந்துபோனது.
வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்த சம்பவம்
மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ருதி பாபு 72 வயதான முதியவர் ஒருவரைப் பார்த்துள்ளார். அவருக்கு பக்கவாதம் பாதிக்கப்பட்டிருந்தது.
“அந்த பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவரோட பெண்களும் கூட இருந்தாங்க. அவர் வேட்டி மட்டும் கட்டியிருந்தாரு. டாய்லெட் போகணும்னு சொன்னாரு. பெட்பேன் கிடைக்குமான்னு அவரோட பெண் நர்ஸ்கிட்ட கேட்டாங்க,” என்று அவர் கண்ட காட்சியை நினைவுகூர்ந்தார் ஸ்ருதி.
வேலையில் பிசியாக இருந்த நர்ஸ், பெரியவரை சக்கர நாற்காலியில் அழைத்து செல்லுமாறு அவரது மகளிடம் கூறியிருக்கிறார்.
”சொந்த மகளுக்கு முன்னால் டாய்லெட் போகமுடியாத தவிப்பு ஒருபுறம், கூச்சம் ஒருபுறம் என கூனிக்குறுகிப் போயுள்ளார். துணியைப் பிடித்துக்கொண்டு உடம்பை மறைத்துக்கொள்கிறார். ‘பரவாயில்லைப்பா, நான் இருக்கேன்பா, டாய்லெட் போங்க,’ என்று அவரது பெண்களில் ஒருவர் சமாதானம் சொல்கிறார் . அடுத்தது அவருக்கு சுத்தம் செய்யவேண்டியிருந்தது. பெரியவருக்கு தாளமுடியாத துக்கம். ’இந்த நிலைமை வந்ததுக்கு நான் செத்தே போயிருக்கலாம்,’ என்று கத்தி கதறுகிறார்.
நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ருதியின் மனதில் ‘நம்மால் ஏதாவது செய்யமுடியுமா?’ என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடையைத் தேடும்போது உருவானதுதான் ‘சகாயதா’ யோசனை.
“கை, கால் செயல்படாம போனவங்க குறைஞ்சபட்ச உதவியோட அவங்களாவே கழிப்பறை போகணும். எல்லாத்துக்கும் மேல அவங்களோட மரியாதையைக் காப்பாத்தணும். இதுதான் நான் தீர்வுகாணவேண்டிய முக்கியப் புள்ளியாக மாறிச்சு,” என்கிறார் ஸ்ருதி.
சந்தை ஆய்வு
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வளிக்கும் வகையில் ஒரு தயாரிப்பை உருவாக்கினால் அது சரிவருமா? ஒரே ஒரு நபரின் தேவையை வைத்து தீர்மானித்துவிடமுடியாதே? நம் எண்ணத்தில் இருக்கும் தயாரிப்பு பலருக்கு தீர்வளிக்கும் வகையில் அமையுமா?
அடுத்து இந்தக் கேள்விகளுக்கு விடைகாண தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, மும்பை என பல பகுதிகளுக்குச் சென்றுள்ளார் ஸ்ருதி. அங்கு நோயாளிகள், நர்ஸ், நோயாளிகளின் உறவினர்கள் போன்றோரிடம் பேசியுள்ளார்.
“இவங்ககிட்ட பேசும்போது, ‘உண்மைதாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு’ அப்படின்னு சிலர் சொன்னாங்க. ’பெட்பேன் வெச்சுகிட்டா கடைசி காலத்துல இருக்கற மாதிரி தோணுது’ அப்படின்னு சிலர் சொன்னாங்க. இப்படி பல பேருக்கு தேவை இருக்கறது தெரிஞ்சுது,” என்று ஸ்ருதி விவரித்தார்.
படுக்கையில் இருக்கும் ஒருவர் கழிப்பறை செல்லவேண்டுமானால் முதலில் அவரை படுக்கையிலிருந்து சக்கர நாற்காலிக்கு மாற்றவேண்டும்; அடுத்து சக்கர நாற்காலியிலிருந்து டாய்லெட் சீட்டிற்கு மாற்றவேண்டும்; திரும்பவும் சக்கர நாற்காலி, திரும்பவும் படுக்கை. இதில் எந்த ஒரு இடத்திலும் தவறி விழ வாய்ப்புண்டு. அப்படி கீழே விழுந்த பலர் உயிரிழந்துள்ளனர்.
டாய்லெட் போகும் வசதி கொண்ட சக்கர நாற்காலி சந்தையில் இருக்கின்றன. ஆனால் என்ன இல்லை? எதைக் கொடுத்தால் இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்? மரியாதையைக் காப்பாற்றும் அதேசமயம் அவர்கள் கீழே விழாமலும் பாதுகாக்கவேண்டுமே? இந்த கோணத்தில் ஸ்ருதி யோசித்தபோது தயாரிப்பு மேலும் வடிவம் பெற்றது.
சகாயதா சிறப்பம்சம்
“கிட்டத்தட்ட 10 மில்லியன் பேருக்கு சக்கர நாற்காலி தேவைப்படுது. இதுல 4% பேர் இந்த மாதிரி இடம் மாத்தும்போது கீழ விழுந்து உயிரிழக்கறதா புள்ளிவிவரங்கள் சொல்லுது,” என்று சகாயதா தேவையை சுட்டிக்காட்டுகிறார் ஸ்ருதி.
இதைத் தவிர்க்கும் வகையில் சக்கர நாற்காலியிலேயே சுத்தப்படுத்தும் வசதியை சகாயதா தயாரிப்பில் கொடுத்திருப்பது இதன் முக்கிய சிறப்பம்சம். இது சக்கர நாற்காலி போன்றே இருக்கும். இதில் சாய்ந்துகொண்டு படுக்கை போல் மாற்றிக்கொள்ளலாம்.
“உக்காரும்போது வசதியா இருக்கறதுக்காக காலுக்கு கீழ குஷன் கொடுத்திருக்கோம். முக்கியமா அதுவே கிளீன் பண்ணும். இதுதான் எங்க தயாரிப்போட சிறப்பம்சம். இதுவரைக்கும் யாருமே செய்யாத புது அம்சம் இது,” என்கிறார் ஸ்ருதி.
இந்தத் தொழில்நுட்பத்திற்கு இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இதுதவிர 140 நாடுகளிலும் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் முழுமையாக காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
பயனர்கள் ஆய்வு
தயாரிப்பு ரெடி. அடுத்தது யார் வாங்குவார்கள்? என்ன விலையில் இருந்தால் வாங்குவார்கள்? இதைத் தெரிந்துகொள்ள நோயாளிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பேஷண்ட் ஸ்டடி செய்வதற்கு சென்னை தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதியளித்தது.
நோயாளிகளிடம் தயாரிப்பைக் கொடுத்து முயற்சி செய்து பார்த்தபோது ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
”ரொம்ப சர்ப்ரைஸ் ஆயிடுச்சு. போஸ்ட் ஆபரேடிவ் ஐசியூ போனோம். வெறும் சக்கர நாற்காலிதான் அப்படின்னு நினைச்சவங்க இதைப்பத்தி ஆர்வமா கேட்டாங்க. அவங்களுக்கு விரிவா எடுத்து சொன்னோம். ஒவ்வொருத்தரோட ஆச்சரியத்துக்கும் பின்னாடி அவங்களுக்கு நெருக்கமானவங்களுக்கு யூஸ் ஆகுமே அப்படிங்கற சந்தோஷம்தான் அதிகம் தெரிஞ்சுது. நடக்க முடியாதவங்க இருக்காங்க அவங்களுக்குக் கிடைக்குமா, வயசானவங்க படுத்த படுக்கையா இருக்காங்க அவங்களுக்குக் கிடைக்குமா, இப்படி நிறைய பேர் கேக்க ஆரம்பிச்சாங்க,” என்கிறார்.
சோதனை முயற்சிக்காக சென்றவர்களுக்கு ப்ரீஆர்டர்கள் கிடைத்துள்ளன. இதுதான் இந்தத் தயாரிப்பின் வெற்றி. தற்சமயம் ‘சகாயதா’ தயாரிப்பிற்கு 50 ப்ரீ ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன.
சென்னையில் ஒப்பந்த அடிப்பையில் தயாரிப்பாளர்களுடன் இணைந்துள்ளனர். தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக ஸ்ருதி தெரிவிக்கிறார்.
சவால்கள் மற்றும் விலை
வெறும் சக்கர நாற்காலியில் டாய்லெட் வசதியை இணைக்கப்போகிறோம், அவ்வளவுதானே என்று நினைத்தவரின் யோசனை நீண்ட பயணத்திற்குப் பின்னரே செயல்வடிவம் பெற்றுள்ளது.
முழுமையாக தானியங்கி முறையில் சக்கர நாற்காலி வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால் விலை அதிகமாக இருந்தால், எல்லோரும் வாங்கும் நிலையில் இருக்காது என்பது புரிந்துள்ளது. எந்த விலையில் கொடுத்தால் அதிகம் பேர் பயனடைவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நோயாளிகளிடமே கேட்டறிந்துள்ளனர்.
“மார்கெட்ல கொண்டு வர்றதுக்கு முன்னாடியே விலையை வேலிடேட் பண்ணிட்டோம். அதிக விலை கொடுத்து வாங்க முடியறவங்களால வேற ஏற்பாடுகூட பண்ணிக்க முடியும். ஆனா நிறைய செலவு செய்ய முடியாதங்களுக்கு பிராடக்ட் போய் சேரணும்னு நினைச்சேன். இப்போ எங்க ’சகாயதா’ தயாரிப்போட விலை 30,000,” என்கிறார்.
ப்ரீ ஆர்டர்கள் அனைத்தும் இந்த விலைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் நிலையில் மூலப்பொருட்களின் விலையைப் பொருத்து வரும் நாட்களில் தயாரிப்பின் விலையில் மாற்றம் இருக்கலாம் என்கிறார் ஸ்ருதி.
ஆதரவளித்தவர்கள்
“ஃபெலோஷிப்லேர்ந்து எனக்கு சப்போர்ட் பண்ணவங்க BIRAC. ஆரம்பத்தில் 5 லட்ச ரூபாய் கொடுத்து சப்போர்ட் பண்ணாங்க. முதல்ல பண்ண ப்ரோடோடைப் ரொம்ப பெரிசா இருந்துது. யூசர் ஃப்ரென்ட்லியா இல்லை. அப்புறம் ஒரு பயனரோட கண்ணோட்டத்துல பார்த்து நிறைய மாத்தினோம். எங்க குழுவுல இருக்கற ஆண்கள், பெண்கள் எல்லாரும் பயன்படுத்தி ஃபீட்பேக் சொன்னாங்க. மறுபடியும் BIRAC 50 லட்சம் நிதி கொடுத்தாங்க,” என்கிறார்.
கொரோனா சமயத்தில் சோதனை முயற்சிகள் நிறுத்தப்பட்டன.
“மெடிசன் சாப்பிட்ட கோவிட் நோயாளிங்க நிறைய பேருக்கு வயிற்றுப்போக்கு இருந்துது. நர்சிங் ஸ்டாஃப் எல்லாரும் ரொம்ப பிசியா இருந்ததால பேஷண்ட்ஸுக்கு டயாப்பர் போட ஆரம்பிச்சாங்க. ஆனா அதையும் அடிக்கடி மாத்த முடியாம கஷ்டமா இருந்துது. அந்த சமயத்துல திரும்பவும் நாங்க சப்போர்ட் பண்றோம்னு களத்துல இறங்கிட்டோம்,” என்கிறார்.
கோவிட் பரவல் இருந்ததால் ஒருவர் பயன்படுத்திய பிறகு தயாரிப்பை அடுத்தவர் பயன்படுத்தும்போது தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் சகாயதா குழுவினர் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். இந்த செயல்முறையில் சகாயதா குழுவினருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
“எங்க குழுவுல இருந்தவங்களும் தங்களுக்கு நெருக்கமான யாரோ ஒருவரை கொரோனாவால் இழந்திருந்ததால இந்த முயற்சியில ரொம்பவே சப்போர்டா இருந்தாங்க. இது ரொம்பவே டச்சிங்கா இருந்துது,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் ஸ்ருதி.
2020-ம் ஆண்டு ஸ்ருதிக்கு திருமணம் முடிந்தது. கணவர் மும்பையில் இருக்கிறார். ஸ்ருதியின் முன்னெடுப்புகளுக்கு இவர் முழுமையாக ஆதரவளித்து வருகிறார்.
சகாயதா தயாரிப்பு கண்டுபிடித்ததற்காக ஸ்ருதி பாபுவிற்கு ‘சின்னி கிருஷ்ணன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.
வருங்காலத் திட்டங்கள்
ஆன்லைன் புக்கிங் ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த மெடிக்கல் எக்ஸ்போவில் பங்கேற்ற ஸ்ருதி பாபு,
“நிறைய டீலர்களையும் டிஸ்ட்ரிபியூட்டர்களையும் சந்திக்கற சான்ஸ் கிடைச்சுது. நிறைய டாக்டர்ஸ் அவங்க ஹாஸ்பிடலுக்காக சகாயதா தயாரிப்பை வாங்க ஆர்வம் காட்டியிருக்காங்க. ஸ்பாட் புக்கிங்ஸ்கூட இருந்துது,” என்கிறார்.
தற்போதிருப்பது முதல் பேசிக் மாடல். இதில் எலக்ட்ரிகல் அம்சங்கள் குறைவு. அடுத்தகட்டமாக கூடுதல் எலக்ட்ரிகல் அம்சங்களுடன், முழுமையான சொஃபிஸ்டிகேடட் மாடல் உருவாக்கப்பட உள்ளது.
Sahayatha தொடர்புக்கு: 9629424170